Sunday 21 October 2012

ஜெபமாலையின் வல்லமை


ஜெப மாலையை போல வல்லமை படைத்தது இவ்வுலகில் வேறு ஒன்றுமில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த ஓர் நிகழ்வு இது... நான் அப்போது கோட்டயத்தில் படித்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் என் விடுதியில் தங்கியிருந்த ஒரு தோழிக்கும்  இடையில் ஒரு பிரச்சினை. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர்  பேசவில்லை. எனக்குள் வருத்தம். அவளோ என்னை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அவளிடம் நானாக பேசினேன். பிரயோசனம் இல்லை. மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. என்ன செய்வது? அவளிடம் எப்படி பேசுவது? ஒரு எண்ணம் மனதில் உதித்தது. 

அப்போது நேரம் இரவு 11. படுக்கையில் சாய்ந்தேன்.ஜெபமாலை கையில் எடுத்தேன். என் தோழிக்காக ஒரு ஜெபமாலை சொல்ல தொடங்கினேன்.
சொல்லி கொண்டிருக்கும் போது மொபைல் அலறியது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? எண்ணை பார்த்தேன்.  அது ஒரு புதிய எண். தொடர்பை துண்டித்தேன். மீண்டும் போன் அலறியது. காதில் எடுத்து வைத்து விட்டு 'ஹலோ' என்றேன். எதிர்க்குரலை கேட்டதும் திகைப்பு. "ஏ சீக்கிரம் என் அறைக்கு வா. ஐயோ. யாரோ என் அறையை தட்டுகிறார்கள்." முதலில் யார் என்று அறிய முடியவில்லை. பின்னர் உணர்ந்து கொண்டேன். அவள் அவளே என் சண்டைக்கார தோழி. கிடைத்த வாய்ப்பை நழுவ விட முடியுமா ?ஜெப மாலையை கீழே வைத்துவிட்டு" நீ அறையில் சுவிட்ச் ஆன் செய" என்று கூறினேன். "ஐயோ என்னால் முடியாது.ஓடி வா, ஓடி வா" என்று அழுதாள். 
சரி, இதற்கு பயந்தன்கொள்ளி நான் என்ன செய்வது? எப்படி இரவு நேரத்தில் அறையை திறப்பது? அப்படி சிந்தித்து கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு சக்தி என்னை உந்தி தள்ளியது. உடனே கதவை திறந்து ஒருவரின் துணையும் இல்லாமல் அவளின் அறையை சென்றடைந்தேன். மனம் முழுவதும் பயம். 
 ஒரு கள்ளன் ஓடி வந்து என்னை தாக்குகிறான். நான் 'ஐயோ' என்று கத்துகிறேன். கற்பனையில் நான் கண்ட காட்சி இது. ஓடி போனேன். அவள் அறையை திறந்தாள். தலைவிரி கோலத்தில் அழுது கொண்டிருக்கும் அவள்.  முதலில் அவளை ஆறுதல் படுத்தினேன். 
பின்னர் மெதுவாக திருடனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். உடனே பிடித்தும் விட்டோம். திருடனை சும்மா விடலாமா? நைய புடைத்து விட்டோம் வார்த்தைகளால். என் வாயில் வார்த்தைகள் தாறு மாறாக வந்து கொண்டிருந்தது. திருடன் யார் தெரியுமா? எங்கள் அன்பு அருள்சஹோதரி கருணை.
  ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல கதவை தட்டியிருக்கிறார். எனக்குள் கோபமும் சிரிப்பும். கோபம்  எதற்கு என்றால் ஏன் சிஸ்டர் இரவில் வந்து கதவை தட்ட வேண்டும்? பின்னர் தான் அந்த உண்மையை உணர்ந்து கொண்டேன் ..ஜெபமாலையின் வழியாக தன அன்பு மக்கள் அழைக்கும் போது ஓர் அன்னையால்  எப்படி செவி கொடுக்காமல் இருக்க முடியும்? ஆம், அது நம் அன்னை என்னையும் ஏன் தோழியையும் ஓன்றுசேர்த்து வைக்க கண்டுபிடித்த ஓர் தந்திரம். தன்னுடைய உடனிருப்பை உணர்த்த கையாண்ட ஓர் குறுக்கு வழி.

இதை வாசித்து விசுவாசிக்கும் என் அன்பு ஆன்மீக நண்பர்களே, ஒரே ஒரு மங்கள வார்த்தை ஜெபம் சொல்லி நம் அன்னையை புகழ்வீர்களா? நிச்சயமாக உங்கள் வாழ்விலும் அன்னை அற்புதங்களை நிகழ்த்துவார்.  

1 comment: